Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்திட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் - முதலமைச்சரின் முதல் கையெழுத்தான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தைத் தொடங்கிவைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா ?
பெண் குழந்தைகளையும், மகளிரையும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என தேர்தலுக்கு முன்பு முழங்கிய திரு. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு தன் ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன்?
தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் புரையோடிக் கிடக்கும் போதைப்பொருட்கள் புழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகிக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை சிங்கப்பெண் அதிரடிப்படை வந்து தான் தடுக்க வேண்டும் என்றால், அது வரை பெண்கள் யாரும் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என்று சொல்ல வருகிறாரா முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்.
தட்டுத் தடுமாறி அல்லு சில்லுகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள தவெக அரசில், நாள்தோறும் நடைபெறும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதற்குப் போட்டி, பொறாமை, பதற்றம் என புதுப்புது அர்த்தத்தைப் புகுத்தி, விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியில்லாமலும், அவற்றை சரி செய்ய முனைப்புக் காட்டாமலும், எதற்கு கால அவகாசம் கேட்க வேண்டும் என்பது புரியாமலும் போர்க்கால அடிப்படையில் (Emergency Issues) தீர்க்க வேண்டிய பிரச்சினைகளுக்கும், கால அவகாசம் கோருவது எந்த விதத்தில் நியாயம் என்பதே எங்களின் கேள்வி.
ஏற்கனவே காவல்துறையில் நடைமுறையிலுள்ள திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி, பெயரை மாற்றி, புதிதாக எந்த ஒரு பணி நியமனமும் ஏற்படுத்தாமல், ஏற்கனவே பல்வேறு பிரிவுகளில் பணியிலுள்ள காவலர்களையே வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைக் கூட தொடங்கி வைக்கக் காலம் நேரம் பார்க்கும் நிலையில் தான் தற்போதைய தவெக அரசு உள்ளது என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் பொதுவாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதியதாக பொறுப்பேற்கும் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை பார்த்துவிட்டு மெல்ல மெல்ல வெளியே வரும் சமூக விரோதிகள், இம்முறை புதிய ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சுதந்திரமாக செயல்படுவதும், குற்றச் செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுவதும் தவெக அரசின் மீது அவர்களுக்கு துளியளவும் அச்சமில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.
அதோடு போதைப் பொருட்களின் புழக்கத்தை கடந்த ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன்னிடம் இருக்கும் காவல்துறையை பயன்படுத்தி இதுவரை எத்தனை கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்துள்ளார் ? திறமையான காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தயங்குவது ஏன்?
எனவே, பெண்களின் பாதுகாப்பில் எந்த வித சமரசமுமின்றி செயலாற்ற வேண்டியது முதலமைச்சரின் முதல் கடமை என்பதை உணர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்திடுவதோடு கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களின் புழக்கத்தை அடியோடு கட்டுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b