Enter your Email Address to subscribe to our newsletters

ஹரியானா, 05 ஜூன் (ஹி.ச.)
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ள ஜேவர் விமான நிலைய மேம்பால கட்டுமானப் பணியின்போது இன்று காலை கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து ஃபரிதாபாத் பல்லப்கர் துணை காவல் ஆணையர் பிரதீக் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுமானப் பணிக்காக கன்டெய்னர் மீது பொருத்தப்பட்டிருந்த கிரேன், திடீரென நிலை தடுமாறி அதே கன்டெய்னர் மீது விழுந்து நொறுங்கியது.
விபத்து நடந்தபோது அந்த கன்டெய்னருக்குள் நான்கு பேர் இருந்ததாக தகவல் கிடைத்தது. அதில் ஒருவரை மட்டும் உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் தயார் நிலையில் இருந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் மூன்று பேரின் உடல்களை மீட்டுள்ளனர்
என்று அவர் கூறினார்.
ஜேவர் விமான நிலையம் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். இதன் ஒரு பகுதியாக மேம்பால கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று காலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததாகவும், அந்த சூழலில் கிரேன் இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா, வானிலை எச்சரிக்கையை மீறி பணி நடந்ததா என்பது குறித்து போலீசாரும், தொழிலாளர் நலத்துறையினரும் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளர்களின் அடையாளங்கள் குறித்தும், காயமடைந்தவரின் உடல்நிலை குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b