என்கவுண்டரில் மூன்று குற்றவாளிகள் கைது - டெல்லி போலீஸ் அதிரடி
புதுடெல்லி, 06 ஜூன் (ஹி.ச) தெற்கு டெல்லியின் புஷ்ப் விஹார் பகுதியில் டெல்லி காவல்துறையினருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட கும்பலுக்கும் இடையே இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லி
என்கவுண்டரில் மூன்று குற்றவாளிகள்  கைது - டெல்லி போலீஸ் அதிரடி


புதுடெல்லி, 06 ஜூன் (ஹி.ச)

தெற்கு டெல்லியின் புஷ்ப் விஹார் பகுதியில் டெல்லி காவல்துறையினருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட கும்பலுக்கும் இடையே இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு டெல்லி சிறப்புப் பிரிவு மற்றும் ஆட்டோ திருட்டு தடுப்புப் பிரிவு (AATS) அதிகாரிகள் அடங்கிய தனிப்படை, புஷ்ப் விஹாரில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் களமிறங்கியது.

அப்போது அங்கிருந்த மூவர் தப்பியோட முயன்றதோடு, காவல்துறையினரை நோக்கி தாக்குதல் நடத்த முற்பட்டனர். தற்காப்புக்காக போலீசார் பதிலடி கொடுத்ததில், மூவரையும் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, ஆயுத தாக்குதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த என்கவுண்டர் சம்பவம் காரணமாக புஷ்ப் விஹார் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தற்போது அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுடன் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b