Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜூன் (ஹி.ச)
தமிழ்நாட்டிலுள்ள முருகன் கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை ஆன்மீகம், அதீத அறிவியல் மற்றும் கட்டிடக்கலை அதிசயங்களின் மையங்களாகவும் விளங்குகின்றன.
அறுபடை வீடுகளாக அறியப்படும் திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,பழனி, சுவாமிமலை, திருத்தணி,பழமுதிர்சோலை ஆகிய கோவில்களை போல மிகவும் பிரசித்தி பெற்ற ஏராளமான முருகன் ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளன.
அவற்றின் சில கோவில் சிறப்புகள் பின்வருமாறு:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முருகன் வழக்கமான வேலுக்குப் பதிலாக, தன் கையில் செங்கரும்பை ஏந்தியவாறு மிகவும் அபூர்வமான கோலத்தில் காட்சியளிக்கிறார். பக்தர்களின் வாழ்க்கையை இனிமையாக்க இக்கோலம் கொண்டதாக நம்பப்படுகிறது.
புதுக்கோட்டையில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான விராலிமலை முருகன் கோயிலில், தினமும் உச்சிக்கால பூஜையின் போது முருகனுக்கு 'சுருட்டு' (Cigar) நைவேத்தியமாகப் படைக்கப்படுவது எங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். 'கருப்பமுத்துப் பிள்ளை' என்ற தீவிர பக்தரின் வரலாற்றுடன் தொடர்புடைய இந்த வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், இத்தலம் மயில்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. இந்த ஆலய முருகப்பெருமானை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், ஆன்மிக பலம் அதிகரிக்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமைதோறும் வழிபட்டு வந்தால் வீடு கட்டும் கனவு நனவாகும். விரைவில் திருமணம் நடந்தேறும்.
சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமியை வழிபட்டால் கடன் தொல்லைகள் தீரும், கஷ்டங்கள் விலகி இனிய வாழ்வு அமையும்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எண்கண் முருகனை ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.
நாகப்பட்டினம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில், கந்தசஷ்டி விழாவின் போது முருகன் தன் தாயிடம் 'வேல்' வாங்கும் வைபவம் நடைபெறும். அன்னை வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கியவுடன், இங்கிருக்கும் சிங்காரவேலர் சிலைக்கு முகம் மற்றும் திருமேனி எங்கும் நிஜமாகவே வியர்வை முத்துக்கள் அரும்பும். அசுரனை வதம் செய்யப் போகும் முருகனின் ஆக்ரோஷத்தையும், போர்ப் பதற்றத்தையும் காட்டும் இந்த அதிசய நிகழ்வை இன்றும் மக்கள் நேரில் கண்டு வழிபடுகின்றனர்
அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைக்கழி சுப்பிரமணியரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும், நினைத்த காரியம் நிறைவேறும்.
தன் தந்தை சிவபெருமானுக்கு முருகன் பிரணவ மந்திரத்தை (ஓம்காரம்) உபதேசித்த தலம் சுவாமிமலை முருகப் பெருமானை வழிபட்டால் கல்வி, ஞானம், கலைகளில் சிறந்து விளங்கலாம்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புகழ் பெற்ற சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டால் தோஷம் நீங்கி நற்பலன் கிடைக்கும்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சி குமாரசுவாமியை தொடர்ந்து மூன்று வளர்பிறை சஷ்டி திதிகளில் பதினோரு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகள், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு தேனும், தினை மாவும் வைத்து பூஜை செய்து, அவற்றை அருட்பிரசாதமாக வாங்கி சாப்பிட்டால் நாளடைவில் பேச்சுத்திறன் வருவதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b