செய்தித்தாளில் வழங்கப்படும் உணவுப் பொட்டலம் உடல்நலத்திற்கு ஆபத்து - உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடும் எச்சரிக்கை
சென்னை, 08 ஜூன் (ஹி.ச.) செய்தித்தாள்களில் வடை, போண்டா போன்ற உணவுப் பொருட்களை பார்சல் செய்து வழங்கும் பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடைக்காரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கடுமைய
Food packets wrapped in newspaper pose a health risk


சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)

செய்தித்தாள்களில் வடை, போண்டா போன்ற உணவுப் பொருட்களை பார்சல் செய்து வழங்கும் பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடைக்காரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்தித்தாள்களை அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் மையில் மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் கலந்துள்ளன.

குறிப்பாக அச்சு மையில் ஈயம், காட்மியம் போன்ற கன உலோகங்கள், நச்சு நிறமிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

சூடான மற்றும் எண்ணெய் தன்மை கொண்ட வடை, போண்டா, பஜ்ஜி போன்ற உணவுப் பண்டங்களை செய்தித்தாளில் சுற்றும்போது, அந்த மையில் உள்ள நச்சுப் பொருட்கள் எளிதாக உணவில் கலந்துவிடும் அபாயம் உள்ளது.

இவ்வாறு நச்சுக் கலந்த உணவை தொடர்ந்து உட்கொள்வதால் செரிமானக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமை ஏற்படுவதோடு, நாளடைவில் புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற கடுமையான உடல்நலக் கேடுகள் உருவாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இதன் பாதிப்பு தீவிரமாக இருக்கும்.

எனவே, பொதுமக்களின் உடல்நலன் கருதி உணவகங்கள், தெருவோரக் கடைகள் மற்றும் பேக்கரிகள் உணவுப் பொருட்களை பார்சல் செய்ய செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதற்கு மாற்றாக உணவு தரச் சான்று பெற்ற அலுமினிய ஃபாயில், வாழை இலை, பட்டர் பேப்பர் அல்லது உணவுக்கு உகந்த கொள்கலன்களைப் பயன்படுத்த உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விதிமுறையை மீறும் கடைகள் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b