Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 08 ஜூன் (ஹி.ச)
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMI) தங்கக் கடத்தல் கும்பலை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) முறியடித்துள்ளது.
நேற்று இரவு, ‘ஆபரேஷன் கோல்டன் நெக்சஸ்’ என்ற நடவடிக்கையின் கீழ், மெழுகு வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தங்கம் 3.2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் தொடர்பாக 7 பேரை டி.ஆர்.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில், கடத்தலுக்கு கேரியர்களாக செயல்பட்ட வங்கதேசம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர், தங்கத்தை பெற்று கடத்த முயன்ற விமான நிலைய ஊழியர்கள் 3 பேர், மும்பையில் தங்கத்தை பெற இருந்த ஒருவர் ஆகியோர் அடங்குவர் என டி.ஆர்.ஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்காக்கில் இருந்து வந்து மும்பை வழியாக பயணம் செய்யும் வங்கதேச மற்றும் இலங்கை நாட்டவர்களிடமிருந்து கடத்தல் தங்கத்தை பெற்று, விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்று உள்ளூர் நபர்களிடம் ஒப்படைப்பதில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டதாக கிடைத்த துல்லியமான தகவலின் அடிப்படையில் DRI இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
விமான நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பேருந்து கண்காணிப்பாளர் ஆகிய மூன்று ஊழியர்களை, விமான நிலையத்திற்கு வெளியே தங்கத்தை கையாண்டு பெறுநரிடம் ஒப்படைக்க முயன்றபோது அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்தக் கும்பலுக்காக செயல்பட்ட மூன்று பயணிகள் அடையாளம் காணப்பட்டனர்.
ஒரு வங்கதேச நாட்டவர் மற்றும் இரண்டு இலங்கை நாட்டவர் அடங்கிய இவர்கள், தொடர்பு விமானங்கள் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட தங்கம் அவர்களின் உடலுக்குள் மறைத்து வைத்து இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
Hindusthan Samachar / vidya.b