ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு முன் ஜெய்ப்பூரில் இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தம்
ஜெய்ப்பூர், 08 ஜூன் (ஹி.ச) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம் (ஜே.டி.ஏ) இன்று நடத்தவுள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை முன்னிட்டு, பொது அமைதியைப் பேணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்ப்பூர் மாவட்ட நிர்வாகம் இணைய சேவையை தற்கா
ஜே.டி.ஏ ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு முன் ஜெய்ப்பூரில் இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தம்


ஜெய்ப்பூர், 08 ஜூன் (ஹி.ச)

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம் (ஜே.டி.ஏ) இன்று நடத்தவுள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை முன்னிட்டு, பொது அமைதியைப் பேணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்ப்பூர் மாவட்ட நிர்வாகம் இணைய சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, வதந்திகள் பரவி அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜெய்ப்பூர் கோட்ட ஆணையர் வி. சரவணகுமார் தெரிவித்தார்.

ஜே.டி.ஏ மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஜகத்புரா பகுதியில் தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. நந்த்புரி சுரங்கப்பாதை அருகே ரயில் பாதையை ஒட்டியுள்ள சாலையை தற்போதுள்ள 25-30 அடி அகலத்தில் இருந்து திட்டமிடப்பட்ட 80 அடியாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சாலையின் உரிமைப் பகுதியை ஆக்கிரமித்துள்ள ஒரு மசூதி, இரண்டு கோயில்கள், ஒரு சத்சங்க கூடம் மற்றும் ஒரு மசார் (தர்கா) உள்ளிட்ட ஐந்து வழிபாட்டுத் தலங்களை அகற்றும் பணி இந்த நடவடிக்கையில் அடங்கும். இடிப்புப் பணிகளின்போது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க கூடுதல் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மே 22-ஆம் தேதி நடைபெற்ற முந்தைய நடவடிக்கையில் 134 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக ஜே.டி.ஏ விஜிலென்ஸ் பிரிவின் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற ஆக்கிரமிப்பாளர்களுக்கு தங்கள் கட்டுமானங்களை தாங்களாகவே அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் நேரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

பல இடங்களில் சாலை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட 80 அடி அகலத்தை விட கணிசமாகக் குறுகலாக உள்ளதால், திட்டமிடல் விதிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Hindusthan Samachar / vidya.b