Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 08 ஜூன் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம், மேலகாவிரிப் பகுதியைச் சேர்ந்தவர் மண்டை செல்வம் (வயது 53). இவர் மீது கஞ்சா மற்றும் மதுபானங்கள் விற்பனை, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிக குற்ற வழக்குகள் உள்ளதால் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இவரது பெயரும் உள்ளது. இந்த நிலையில், அவர் நேற்று மாலை கும்பகோணம் மடத்துத்தெரு பகுதியில் இருந்துள்ளார். பின்னர் அங்கேயே இரவு மது அருந்திவிட்டு காவிரி ஆற்றுப்பாலத்தில் உறங்கியுள்ளார்.
இந்த நிலையில், காவிரி ஆறு ஓடும் பாலக்கரை பகுதியில் ஆண் சடலம் மிதப்பதாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த காவல்துறையினர், காவிரி ஆற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். அப்போது தான் தெரிய வந்தது மண்டை செல்வம் என்பது. அவரது தலை மற்றும் முதுகுப்பகுதியில் இரத்த காயங்கள் இருந்துள்ளது.
இதையடுத்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, மண்டை செல்வத்தின் உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கஞ்சா விற்பனை வழக்கு ஒன்றில் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அவர் வந்திருந்ததும், இதற்கு முன்பு அவர் தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்தது.
கடந்த 2004- ஆம் ஆண்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக மண்டை செல்வத்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மண்டை செல்வத்தின் முதுகு மற்றும் தலை பகுதிகளில் கட்டையால் அடித்தக் காயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மண்டை செல்வம் தனியாக மது அருந்தினாரா? நண்பர்களுடன் மது அருந்தினாரா? முன்விரோதம் காரணமாகக் கொலைச் செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
சரித்திரப் பதிவேடு குற்றவாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கும்பகோணம் பாலக்கரை பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN