முதல்வர் விஜய் புகைப்படத்துக்கு கீழ் பணியாற்ற மனமில்லை - இருக்கையை மாற்றியமைத்த நெல்லை மேயர்
நெல்லை, 08 ஜூன் (ஹி.ச.) திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் அறையில், இத்தனை வருடங்களாக மேயருக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து தான் கோப்புகளையும், மக்கள் பணிகளையும் கவனிப்பது வழக்கமாக இருந்து வந்தது. அந்த முதன்
Nellai Mayor


நெல்லை, 08 ஜூன் (ஹி.ச.)

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் அறையில், இத்தனை வருடங்களாக மேயருக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து தான் கோப்புகளையும், மக்கள் பணிகளையும் கவனிப்பது வழக்கமாக இருந்து வந்தது.

அந்த முதன்மை இருக்கைக்கு பின்புறம் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக முதல்வர் விஜய்யின் புகைப்படத்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் ஒரு மூலையில் படத்தை வைத்திருப்பதாகவும், பிரதானமாக சுவற்றில் முதலமைச்சரின் படத்தை மாற்ற கோரியும் தமிழக வெற்றிக் கழகத்தினர் சமீபத்தில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள சுவற்றின் நடுப்பகுதியில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய்யின் புகைப்படம் மாட்டப்பட்டது.

இந்த நிலையில் மேயர் ராமகிருஷ்ணன் திடீரென தனது இருக்கையில் இருந்து மாறி, அறையின் மற்றொரு பகுதியில் திமுக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்திற்கு கீழே புதிய இருக்கை மற்றும் மேஜை அமைத்து, அங்கு அமர்ந்து பணிகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து மேயர் ராமகிருஷ்ணனிடம் தொலைபேசியில் கேட்டபோது,

எனக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தின் கீழ்அமர்ந்து பணிபுரிவது தான் பிடித்திருக்கிறது. இதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. இதனால் எனது மக்கள் பணி எந்த வகையிலும் பாதிக்காது என்றார்.

இருப்பினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர் புகைப்படத்திற்கு கீழ் அமர்ந்து வேலை பார்க்க மனம் இல்லாமல் அறையில் முழு கட்டமைப்பையும் மாற்றி தனது விருப்பப்படி மேயர் பணிபுரிவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மேயரை பார்க்க வரும் பார்வையாளர்களின் இருக்கைகளையும் அவருக்கு ஏற்றாற்போல் மாற்றி உள்ளார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN