Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 08 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் பகுதியில், குடியிருப்பு வீடுகளை இடித்து அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கெலமங்கலத்தில் உள்ள ஜீவா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடும்பங்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். கெலமங்கலம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டு, வீடுகளை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என முழக்கமிட்டனர்.
பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த நடவடிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் அல்லது உரிய இழப்பீடு வழங்காமல் வெளியேற்றக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மேலும், மக்களை அச்சுறுத்தும் வகையில் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b