Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் இன்று காலை ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, திடீரென பிரேக் செயலிழந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய அந்த லாரி, சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பெண் ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பேசின் பிரிட்ஜ் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட திடீர் பிரேக் கோளாறே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லாரியின் பராமரிப்பு குறித்தும், ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்தும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
காலை நேர பரபரப்பு மிகுந்த சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால் பேசின் பிரிட்ஜ் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரானது.
Hindusthan Samachar / vidya.b