Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 10 ஜூலை (ஹி.ச.)
'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரி போல பேசிய மோசடி நபர், பாதிக்கப்பட்ட பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் பெயரில் சிம் கார்டு வாங்கி தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாகவும், அதனால் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவாகியுள்ளதாகவும் கூறி அச்சுறுத்தியுள்ளார். மேலும், அவரை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்துள்ளதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார் எனவும் மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டலால் கடும் அச்சமடைந்த அந்தப் பெண், மோசடி நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.9 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி பெங்களூருவைச் சேர்ந்த பர்தீன் அப்பாஸ் (வயது 20) என்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில்,
காவல்துறை உட்பட எந்த அரசுத் துறையிலும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற கைது நடவடிக்கையே கிடையாது. எனவே, இதுபோன்று தொலைபேசியில் அழைத்து மிரட்டுபவர்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐயோ தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சமீபகாலமாக 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் நடைபெறும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b