கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
திருவனந்தபுரம் , 10 ஜூலை (ஹி.ச.) சபரிமலையில் நடைபெற உள்ள மண்டல–மகர விளக்கு சீசனையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கேரள அமைச்சர் முரளீதரன் தெரிவித்தார். சபரிமலை
A


திருவனந்தபுரம் , 10 ஜூலை (ஹி.ச.)

சபரிமலையில் நடைபெற உள்ள மண்டல–மகர விளக்கு சீசனையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கேரள அமைச்சர் முரளீதரன் தெரிவித்தார்.

சபரிமலை சீசன் ஏற்பாடுகள் தொடர்பாக திருவனந்தபுரத்தில் அமைச்சர் முரளீதரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலையில் மண்டல–மகர விளக்கு சீசன் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ளன.

இதையொட்டி தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் குறைபாடுகள் இந்த ஆண்டு மீண்டும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசல் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும்.

அனைத்து பக்தர்களும் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சீசன் தொடங்குவதற்கு முன்பு முதல்-மந்திரி தலைமையில் தென் மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் முரளீதரன் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA