மதுரையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
மதுரை, 10 ஜூலை (ஹி.ச.) காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தை
மதுரையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் - மண்டல அலுவலகம் முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது


மதுரை, 10 ஜூலை (ஹி.ச.)

காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள், குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பல ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாகவே பணியாற்றி வரும் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரசு தங்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவிசாய்க்காவிட்டால், அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b