Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச)
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று (11.07.2026) கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது உருவச் சிலை, அவரது சிலைக்குக் கீழே அவர் உருவப் படத்திற்கும் மலர் மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அழகு முத்துக்கோன் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜெயக்குமார் கூறியதாவது,
ஜூன் மாதத்தில் குருவை சாகுபடிக்கும், அதனைத் தொடர்ந்து சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கும் தேவையான காவிரி நீரை உறுதி செய்ய வேண்டும். முதலில் குருவை சாகுபடிக்காக தற்போது 9.90 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது.
அதேபோல், ஜூலை மாதத்தில் 30 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். காவிரி நீரை திறந்து விடுவதற்காக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கரூர் உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளுக்குச் சென்ற முதல்வர், டெல்டா விவசாயிகளின் பிரச்சினை குறித்து ஏதேனும் பேசினாரா? அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைப் பொறுத்தவரை, ஏராளமான காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், இளைஞர்களின் வேலைவாய்ப்பு எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த சூழலில் வெறும் 32 பேருக்கு மட்டும் பணி வழங்குவது போதுமானதாக இல்லை.
நடிகர் விஜய்யை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது. எம்.ஜி.ஆர். 1958ஆம் ஆண்டு முதல் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்காக வாரி வழங்கினார். அதனால்தான் இன்றும் அவரது பெயரை உச்சரிக்காத தலைவர்கள் இல்லை. ஆனால், விஜய் 1983ஆம் ஆண்டு திரைப்படத் துறைக்கு வந்தவர். பல கோடி ரூபாய் சம்பாதித்திருந்தாலும், அரசியலுக்கு வந்த பிறகுதான் விளம்பரத்திற்காக நலத்திட்ட உதவிகளைச் செய்கிறார்.
உண்மையிலேயே மக்களுக்கு உதவ நினைத்திருந்தால், பணி வழங்கப்பட்ட 32 குடும்பங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கியிருக்கலாம். அந்தத் தொகையை வங்கியில் முதலீடு செய்தால்கூட, அந்தக் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறியிருக்கும். அரசுப் பணியை எதிர்பார்த்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காக படித்து வரும் இளைஞர்களின் வாய்ப்பை ஏன் பறிக்க வேண்டும் என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது. கிராமங்களில் கூறுவது போல, ' கடைத்தேங்காய் எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது' போன்ற செயலாகவே இது உள்ளது.
விஜய் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஏனெனில், சமுதாயத்தை கரையானைப் போல அரித்துக் கொண்டிருப்பது ஊழல்தான். ஆனால், யாரை வைத்துக்கொண்டு இந்தக் கருத்துகளை அவர் பேசுகிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு.
கோழி திருடனை அருகில் வைத்துக்கொண்டு ஊரெங்கும் தண்டோரா போட்டது போல' அவரது அறிக்கைகள் உள்ளன. அவரது பேச்சு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நகைப்புக்கும், அருவருப்புக்கும் உரியதாகவே அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b