Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 ஜூலை (ஹி.ச.)
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரரான மாவீரன் அழகுமுத்துக்கோனின் 269-ஆவது பிறந்தநாள் விழா (குருபூஜை) இன்று (ஜூலை 11) தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காட்டலங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காகக் கனிமொழி கருணாநிதி எம்.பி. இன்று வருகை தந்தார்.
அப்போது பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவரது வாகனத்தைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வாகனத்தை உள்ளே அனுமதிக்கக் கோரிக் கனிமொழி எம்.பி. மற்றும் திமுக கழக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், வாகனத்தை உள்ளே செல்லக் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், கனிமொழி எம்.பி. தனது வாகனத்தில் இருந்து உடனடியாக இறங்கி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார்.
காட்டலங்குளத்தில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் விளாத்திகுளம் ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டி கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு முன்னாள் யூனியன் சேர்மன் மாணிக்கராஜா, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்
Hindusthan Samachar / vidya.b