Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 ஜூலை (ஹி.ச.)
இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜாகிராமத்து எழிலோடு மண்வாசனை மாறாமல் தன்னுடைய கற்பனையை விருந்தளித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா 1941ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி தேனியில் பிறந்தார்.
இவரது இயற்பெயர் சின்னசாமி.
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற ஒரு புரட்சிகரமான திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். என் இனிய தமிழ் மக்களே... என்ற அவரது காந்தக் குரல் கலந்த வாழ்த்துரை உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ஒன்று.
யதார்த்தமான கிராமியப் பதிவுகள்:
நாடக பாணியில் இருந்த தமிழ் சினிமாவை மாற்றி, எளிய மனிதர்களின் வாழ்க்கை, சாதியப் பாகுபாடுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தனது படங்களில் யதார்த்தமாகப் பதிவு செய்தார்.
புதிய திறமைகளின் முகவரி:
தமிழ் திரையுலகிற்கு இளையராஜா, பாக்யராஜ், வைரமுத்து போன்ற மாபெரும் கலைஞர்களையும், ராதிகா, ராதா, ரேவதி, கார்த்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்து, இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்தார். மேலும், பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் சேர்ந்து சினிமா நுணுக்கங்களை கற்றார்.
1977ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான 16 வயதினிலே, மாபெரும் வெற்றியை தந்தது. அதை தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், கருத்தம்மா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் பத்மஸ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 2 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
Hindusthan Samachar / Durai.J