வீட்டு வசதிகள் குறித்த சுய கணக்கெடுப்பை வீட்டிலிருந்தே முடிக்கலாம் - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
புதுடெல்லி, 17 ஜூலை (ஹி.ச) மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டு வசதிகள் குறித்த கணக்கெடுப்பை பொதுமக்களே ஆன்லைன் மூலம் சுயமாக மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் www.censusindia.gov.in மற்
வீட்டு வசதிகள் குறித்த சுய கணக்கெடுப்பை வீட்டிலிருந்தே முடிக்கலாம் - மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்


புதுடெல்லி, 17 ஜூலை (ஹி.ச)

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டு வசதிகள் குறித்த கணக்கெடுப்பை பொதுமக்களே ஆன்லைன் மூலம் சுயமாக மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி பொதுமக்கள் www.censusindia.gov.in மற்றும் www.se.census.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று சுய கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம்.

இணையதளத்தில் நுழைந்தவுடன் மாநிலம் என்ற பகுதியில் தமிழ்நாடு என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டை சரியாக பதிவு செய்து, தங்களது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும்.

இந்த கணக்கெடுப்பை நாடு முழுவதும் உள்ள மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 16 மொழிகளில் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் உட்பட தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்தவுடன், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் எனப்படும் ஓடிபி எண் அனுப்பப்படும்.

அதை பதிவிட்டு உள்நுழைந்த பின்னர், தங்களது மாவட்டம், கிராமம் அல்லது நகரம், பின்கோடு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் தாங்கள் வசிக்கும் வீடு இருக்கும் இடம் கூகுள் வரைபடத்தில் துல்லியமாக உறுதி செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து வீட்டின் வசதிகள் குறித்து கேட்கப்படும் 33 கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளிக்க வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த பிறகு, தாங்கள் அளித்த பதில்களை ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்த பின்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்களை வெற்றிகரமாக சமர்ப்பித்தவுடன், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு 11 இலக்கங்கள் கொண்ட உறுதி எண் குறுந்தகவலாக அனுப்பப்படும்.

வீடு வீடாக கணக்கெடுக்க வரும் அரசு பணியாளர்களிடம் இந்த 11 இலக்க எண்ணை தெரிவித்தால், தாங்கள் ஏற்கனவே சுய கணக்கெடுப்பை முடித்து விட்டதை அவர்கள் உறுதி செய்து கொள்வார்கள்.

இதனால் மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b