திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் - இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி, 17 ஜூலை (ஹி.ச.) உலக பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதால் திருமலை முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது. ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட பல மடங்க
Surging crowds of devotees at Tirupati


திருப்பதி, 17 ஜூலை (ஹி.ச.)

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதால் திருமலை முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களின் வரிசை சுமார் ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ளது.

நேரடி இலவச தரிசனமான சர்வ தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி வழிவதால், பக்தர்கள் வெளியே சாலைகளிலும் காத்திருக்கின்றனர்.

அதே சமயம், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் கூட சுமார் நான்கு மணி நேரம் வரை காத்திருந்த பின்னரே தரிசனம் செய்ய முடிகிறது.

இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (SSD) பெற்று வரும் பக்தர்கள் 5 முதல் 7 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்ய முடிகிறது.

திருமலையில் நிலவி வரும் வரலாறு காணாத நெரிசல் காரணமாக, நேரடியாக வழங்கப்படும் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் (SSD) விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வரிசையில் பல மணி நேரமாக காத்திருக்கும் பக்தர்களுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் தொடர்ந்து இலவச அன்னப்பிரசாதம், பால், காபி, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன

கூட்ட நெரிசலை சமாளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், பக்தர்களின் தொடர் வருகையால் காத்திருப்பு நேரம் குறைந்தபாடில்லை.

எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத் திட்டத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b