சென்னையில் சிறப்பு முகாம் மூலம் ரூ.103.03 கோடி சொத்து வரி வசூல் -  நிலுவை வரி செலுத்த மாநகராட்சி அழைப்பு
சென்னை, 18 ஜூலை (ஹி.ச.) சென்னை மாநகராட்சியில் நிலுவை சொத்து வரியை வசூலிப்பதற்காக நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் மூலம், ஜூலை 3 முதல் ஜூலை 16 வரை ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய வ
Corporation


சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியில் நிலுவை சொத்து வரியை வசூலிப்பதற்காக நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் மூலம், ஜூலை 3 முதல் ஜூலை 16 வரை ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் ஆதாரமான சொத்து வரி மூலம், சாலை பராமரிப்பு, தெரு விளக்குகள், குப்பை அகற்றுதல், பூங்காக்கள் பராமரிப்பு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புப் பணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 14,23,653 சொத்து உரிமையாளர்களில் 7,10,285 பேர் நிலுவையின்றி சொத்து வரியை முழுமையாக செலுத்தியுள்ளனர்.

மீதமுள்ள சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.969.56 கோடி நிலுவை சொத்து வரி வசூலிக்கப்பட வேண்டியுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 3 முதல் தொடங்கிய சிறப்பு சொத்து வரி வசூல் முகாம்கள் ஜூலை 31 வரை நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடைபெற்ற முகாம்களில், சொத்து உரிமையாளர்கள் தாமாக முன்வந்து நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரியை செலுத்தியதன் மூலம் ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சொத்து வரி வசூல் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், ஜூலை மாத இறுதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் தீவிர வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவை சொத்து வரியை இணையதளம், மொபைல் செயலி, வரி வசூலிப்பாளர்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் மண்டலங்கள், வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் மூலம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செலுத்தலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், நிலுவை வரியை காலதாமதமின்றி செலுத்தி, தனிவட்டி விதிக்கப்படுவதைத் தவிர்க்குமாறும், மாநகராட்சியின் அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ