Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம் , 18 ஜூலை (ஹி.ச.)
நாகை மாவட்டம் மேலப்பிடாகையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் திமுகவின் ஒன்றிய துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர் வெண்மணி என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், வெண்மணி தனது சகோதரர்கள் இருவருடன் சேர்ந்து ரவிச்சந்திரனை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ரவிச்சந்திரன் தரப்பில் அளித்த புகாரின் பேரில், ரேஷன் கடை விற்பனையாளர் வெண்மணி மற்றும் அவரது சகோதரர்கள் இருவர் என மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு ஊழியர் பொதுமக்களைத் தாக்கியது, இரும்புக் கம்பியால் அச்சுறுத்தி காயம் ஏற்படுத்தியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b