Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)
சென்னை சைதாப்பேட்டை அருகே நந்தனம் பகுதியில் உள்ள முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அண்ணியூர் சிவா (எ) சிவசண்முகம் வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அண்ணியூர் சிவாவுக்கு சொந்தமான நந்தனம் லோட்டஸ் காலனி 3-வது தெருவில் உள்ள வீட்டில் சமீபத்தில் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வீடு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டை பார்வையிட வந்த அண்ணியூர் சிவா, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் நோக்கில் பூட்டை உடைத்து முயற்சி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்து ஏதேனும் பொருட்கள் திருடப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களை அடையாளம் காணும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ