Enter your Email Address to subscribe to our newsletters

புது டெல்லி, 19 ஜூலை ( ஹி.ச.)
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சுற்றுச் சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 28-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார்.
அவருடன் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
21-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் நேற்று டெல்லி காவல்துறையினரால் கட்டாயமாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
ஜூலை 20-ம் தேதி இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.
அச்சமற்ற இந்தியா, அநீதியற்ற இந்தியா. அநீதியிலிருந்து விடுதலை (தேர்வு வினாத்தாள் கசிவு போன்றவை), அச்சத்திலிருந்து விடுதலை (என்னைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பது) நோக்கியது இந்தப் போராட்டம்.
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமான, நாடாளுமன்றத்தை நோக்கிய இப்பேரணியை மாபெரும் வெற்றியடையச் செய்யுங்கள்.
இந்தச் செய்தி சஃப்தர்ஜங்கில் நான் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து கீதாஞ்சலி மூலம் அனுப்பப்பட்டது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b