Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய 3 இளைஞர்களை கைது செய்தனர்.
ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய மூவரை ஒத்தக்கடை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சாதி மோதல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பட்டியலின மக்கள் காயாம்பட்டி பகுதியில் நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த சுப்பன் (70) என்பவரை ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், அப்பகுதியில் உள்ள நான்கு வீடுகளின் கூரை ஓடுகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
தகவலறிந்ததும் மதுரை சரக காவல் துறை துணைத்தலைவர் அபினவ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந. தேவநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காயாம்பட்டி காலனியைச் சேர்ந்த ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய மூவரையும் போலீசார் உடனடியாக கைது செய்து, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஜாதி ரீதியான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையெனில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந. தேவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / Durai.J