பெங்களூரு அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து - 7 தொழிலாளர்கள் பலி
பெங்களூரு, 02 ஜூலை (ஹி.ச.) பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள மாதாபட்டணா கிராமத்தில் ''காவேரி ஜெல்லி கிரஷர்'' (Kaveri Jelly Crusher) என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகின்றது. இங்கு இன்று அதிகாலை சுமார் 7:30 மணியளவில், தொழிலாளர்கள் தங்களது வ
பெங்களூரு அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்தது விபத்து -  7 தொழிலாளர்கள் பலி


பெங்களூரு, 02 ஜூலை (ஹி.ச.)

பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள மாதாபட்டணா கிராமத்தில் 'காவேரி ஜெல்லி கிரஷர்' (Kaveri Jelly Crusher) என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகின்றது.

இங்கு இன்று அதிகாலை சுமார் 7:30 மணியளவில், தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 40 அடி உயரத்தில் இருந்து ஒரு பெரிய பாறை திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளது.

அந்தப் பாறை, அங்கு கற்களை ஏற்றிக்கொண்டிருந்த ஒரு டிராக்டர் மற்றும் இயந்திரங்களின் மீது விழுந்ததால், தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ராஜராஜேஸ்வரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் பீகார் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்தபோது அங்கு சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுவதால், மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தவாரெகெரே காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக குவாரி உரிமையாளர் ஆனந்தசுவாமி என்பவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இந்த விபத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத மற்றும் விதிகளை மீறும் குவாரிகள் மீது கடுமையான அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்

Hindusthan Samachar / vidya.b