டெல்லியில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி - ஐஎஸ்ஐ தொகுதியைச் சேர்ந்த 4 பேர் கைது, ஆயுதங்கள் பறிமுதல்
புதுடெல்லி, 02 ஜூலை (ஹி.ச.) பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐஎஸ்ஐ கையாளுநர் ஷாசாத் பட்டியின் வழிகாட்டுதலில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறி, பஞ்சாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக டெல்லி கா
டெல்லியில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி - ஐஎஸ்ஐ தொகுதியைச் சேர்ந்த 4 பேர் கைது, ஆயுதங்கள் பறிமுதல்


புதுடெல்லி, 02 ஜூலை (ஹி.ச.)

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐஎஸ்ஐ கையாளுநர் ஷாசாத் பட்டியின் வழிகாட்டுதலில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறி, பஞ்சாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு இன்று அறிவித்துள்ளது.

கைதானவர்கள் சுப்தீப் சிங் (23), குர்ஜந்த் சிங் (22), சஜன் சிங் (28), மற்றும் ககன்ப்ரீத் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் பஞ்சாப் மாநிலத்தையும், ஒருவர் டெல்லியையும் சேர்ந்தவர்கள்.

குற்றவாளிகளிடமிருந்து இரண்டு வெளிநாட்டு தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், ஒன்பது உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் ஐந்து கைபேசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், ஆய்வாளர்கள் சதீஷ் ராணா மற்றும் அசோக் தலைமையில், ஏசிபி விவேக் குமார் தியாகியின் மேற்பார்வையில் டெல்லி மற்றும் பஞ்சாபில் சோதனை நடத்தப்பட்டது.

முதலாவதாக அமிர்தசரஸில் சுப்தீப் சிங் ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கைபேசிகளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அவரது கூட்டாளிகளான குர்ஜந்த் சிங் மற்றும் சஜன் சிங் பஞ்சாபில் கைது செய்யப்பட்டனர்.

நான்காவது குற்றவாளியான ககன்ப்ரீத் ஏப்ரல் 24 அன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது, கண்டுபிடிக்கப்படாமல் இருக்க பாகிஸ்தான் கையாளுநர்களுடன் வெளிநாட்டு தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டதாக குற்றவாளிகள் தெரிவித்தனர்.

எல்லை தாண்டி ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைப் பெற்றதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். டெல்லியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்த ககன்ப்ரீத் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் டெல்லியில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை உளவு பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய தரன் தரனைச் சேர்ந்த சுப்தீப் சிங் என்ற விஷால், முன்னர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி, ட்ரோன் மூலம் வந்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைப் பெற்றுள்ளார். தரன் தரனைச் சேர்ந்த குர்ஜந்த் சிங் என்ற ரிஷியும், அவரது உறவினரான அமிர்தசரஸைச் சேர்ந்த சஜன் சிங் என்ற ஹனியும் ட்ரோன் மூலம் வந்த ஆயுதங்களைப் பெறுவதில் ஈடுபட்டுள்ளனர்.

இருவர் மீதும் முன்னர் NDPS வழக்குகள் உள்ளன. பதேகர் சாஹிபைச் சேர்ந்த ககன்ப்ரீத், சமூக ஊடகங்கள் மூலம் கையாளுநர்களுடன் தொடர்பில் இருந்து, டெல்லியில் உள்ள காவல் நிறுவனங்களின் வீடியோக்களை எடுக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்.

இவ்வழக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வலைப்பின்னலில் உள்ள கூடுதல் உறுப்பினர்களை அடையாளம் காண சிறப்பு பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Hindusthan Samachar / vidya.b