Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஜூலை (ஹி.ச.)
மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் சம்ருத்தி மகாமார்க் விரைவுச்சாலையின் 80-வது இடைமாற்றுச் சாலை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதன்பின் சிறிது நேரத்தில், அதே இடத்தில் மற்றொரு லாரி, ஒரு காரின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இந்த மோதலில், அந்த காரில் பயணித்த வார்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கிய லாரியில் பயணித்த இருவர் உயிரிழந்ததாகவும், இதனால் இச்சம்பவத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் மும்பையிலிருந்து நாக்பூர் செல்லும் விரைவுச்சாலை முற்றிலுமாக முடங்கியது. இதையடுத்து நாக்பூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் எதிர் திசை சாலைக்கு திருப்பிவிடப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாக்பூரிலிருந்து மும்பை நோக்கி பயணிக்கும் வாகன ஓட்டிகள், சில மணி நேரத்திற்கு வார்தா வரையிலான சம்ருத்தி விரைவுச்சாலையைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதற்குப் பதிலாக நாக்பூர் - அமராவதி நெடுஞ்சாலை வழியாகச் சென்று, அமராவதி கேட் இடைமாற்றுச் சாலை வழியாக மீண்டும் விரைவுச்சாலையில் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மும்பையிலிருந்து நாக்பூர் செல்லும் பயணிகளும் அமராவதி கேட் இடைமாற்றுச் சாலையில் வெளியேறி, நாக்பூர் - அமராவதி நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் நெடுஞ்சாலை பாதுகாப்பு ரோந்துப் படை, வார்தா காவல்துறை, தீயணைப்புப் படை மற்றும் மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தினர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எத்தனால் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி கன்டெய்னரில் உள்ள எத்தனாலை முதலில் வெளியேற்றிய பின்னர் லாரியை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b