காவிரியில் தமிழகத்துக்குரிய நீரை வழங்காத கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை, 20 ஜூலை (ஹி.ச.) அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை 22-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி
இபிஎஸ்


சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூலை 22-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்குரிய முழு பங்கு நீரைப் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் காவிரி நீரையே சார்ந்துள்ளது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தபோதிலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை முறையாக வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலுக்குப் பின்னரும், தமிழகத்துக்குரிய நீரை திறக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழக அரசும் உரிய அழுத்தம் கொடுக்கத் தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்றும், ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சிக்கு பதிலாக 2.91 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை மாதத்திற்கான பங்கு நீரும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடக அணைகள் முழுமையாக நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு நீர் திறக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் கூறியதாக வெளியான தகவல்களை சுட்டிக்காட்டிய அவர், இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிரான நிலைப்பாடு என்றும், தமிழக மக்களின் சார்பில் கர்நாடக முதலமைச்சருக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், வரம்புகளுடன் அறிவித்திருப்பதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளதாகவும், குறுவை சாகுபடிக்கான தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூலை 22-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தமிழகத்தின் முழு பங்கு நீரைப் பெற தமிழக அரசு உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P