நெல் மூட்டைகளை கிடங்கில் அடுக்க வேண்டும் - வாணிபக் கழக அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
திருவாரூர், 20 ஜூலை (ஹி.ச.) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் பணிபுரியும் எழுத்தர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இன்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார்குடி ச
நெல் மூட்டைகளை கிடங்கில் அடுக்க வேண்டும் - வாணிபக் கழக அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்


திருவாரூர், 20 ஜூலை (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் பணிபுரியும் எழுத்தர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இன்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகவும், அவற்றை உடனடியாக கிடங்கிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் அபாயம் உள்ளதாகவும், இதனால் விவசாயிகளும், கொள்முதல் நிலைய பணியாளர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கிடங்கிற்கு நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல போதிய லாரிகள் வசதி செய்து தரப்படவில்லை என்றும், இதனால் கொள்முதல் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல உரிய ஏற்பாடுகளை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b