தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், 20 ஜூலை (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி முன்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்
Farmers stage protest near Thanjavur


தஞ்சாவூர், 20 ஜூலை (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி முன்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாகும்.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், உரம் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வாலும் விவசாயம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில் அரசு உடனடியாக தலையிட்டு தள்ளுபடி அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினர். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மீதான வட்டியை குறைக்க வேண்டும், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

இதையொட்டி அசம்பாவிதம் எதுவும் நேராமல் இருக்க ஆலங்குடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b