ரூ.100 கோடி நில மோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 17 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்
கரூர், 20 ஜூலை (ஹி.ச.) கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான சுமார் 22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக பதிவு செய்து அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 100 கோடி ரூப
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 17 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்


கரூர், 20 ஜூலை (ஹி.ச.)

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான சுமார் 22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக பதிவு செய்து அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இது தொடர்பாக பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் 2024-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதியும், அதனை தொடர்ந்து அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் அதே ஆண்டில் செப்டம்பர் மாதமும் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், அப்போது காவல் ஆய்வாளராக பணியாற்றிய பிரித்விராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது அவர்கள் 17 பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல்கள் நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / vidya.b