Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
தடையற்ற மின்சாரத்தை எந்தவித குளறுபடிகளுமின்றி விநியோகம் செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மின்கட்டணமும் இருமடங்காக அதிகரித்திருப்பதாக மின் நுகர்வோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்து மக்களை ஏமாற்றிய கையேடு, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகையையும் மக்களிடமே மறைமுகமாக மின்கட்டணத்தின் மூலம் வசூல் செய்ய முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், தமிழக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் நடப்பாண்டில் உயர்த்தப்படாது என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, பொதுமக்களின் கண்களில் மண்ணை தூவி மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கியிருக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மின் கணக்கீட்டு முறையில் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதால் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருப்பதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், மின் நுகர்வோர்களிடம் இருந்து இதுவரை அதிகமாக பெறப்பட்ட மின்கட்டணங்களை திருப்பியளிப்பதோடு, தமிழகம் முழுவதும் குளறுபடிகள் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டு, அவை சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மின்வாரியம் அறிவிக்கவேண்டும்.
பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர், தன் துறையில் நடைபெறும் சாதனத் திருட்டுகளையும், நிர்வாகக் குளறுபடிகளையும் களைய உருப்படியான சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், காலை - மாலை என இரு வேளைகளிலும் தன் குறைகளை மறைப்பதற்காகவும், பிரச்சனைகளை மடைமாற்றுவதற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படி இழிவாக விமர்சிக்கலாம் என்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வருவதே மின்சாரத்துறையில் நடைபெற்றிருக்கும் இத்தகைய குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாக அமைத்திருக்கிறது.
எனவே, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, குழப்பமான, குளறுபடிகள் நிறைந்த கணக்கீடுகளின் மூலம் மக்களை சுரண்டும் அமைப்பாக செயல்படக்கூடாது என்பதை இனியாவது உணர்ந்து, தடையற்ற மின்சாரத்தை எந்தவித குளறுபடிகளுமின்றி விநியோகம் செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b