ராமர் கோயில் அறக்கட்டளை கூட்டம் - நிதி பரிவர்த்தனைகள் மற்றும் புதிய அறங்காவலர்கள் நியமனம் குறித்து ஆலோசனை
அயோத்தி, 22 ஜூலை (ஹி.ச.) உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த நன்கொடைகள் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ராமர் கோயில் அறக்கட்டளை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. நன்க
ராமர் கோயில் அறக்கட்டளை கூட்டம் -  நிதி பரிவர்த்தனைகள் மற்றும் புதிய அறங்காவலர்கள் நியமனம் குறித்து ஆலோசனை


அயோத்தி, 22 ஜூலை (ஹி.ச.)

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த நன்கொடைகள் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ராமர் கோயில் அறக்கட்டளை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நன்கொடைகள் முறைகேடு தொடர்பாக மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

சிறப்பு புலனாய்வுக் குழுவை மறுசீரமைப்பது குறித்து ஆலோசனை பெறுமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது.

நிதி மோசடி விசாரணையில் அனுபவம் வாய்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் நீதிமன்றம் வெளிப்படுத்தியது.

ராமர் கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வந்த ரொக்க நன்கொடைகள், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறி, நீதித்துறை தலையீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேச அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைத் தொடர்ந்து மாநில அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குற்றம் நடந்துள்ளதா என்பதை கண்டறியும் பணி சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேத்தா தெரிவித்தார்.

நிலை அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, தற்போதைய சிறப்பு புலனாய்வுக் குழுவின் கட்டமைப்பு குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையை மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், முறையான விசாரணை தொடங்குவதற்கு முன்பே பல ஊழியர்களிடமிருந்து சுமார் 78.94 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டதாகவும், ஜூன் 4 ஆம் தேதி எண்ணும் அறைக்கு அருகிலுள்ள கழிவறையில் இருந்து 2.25 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமர் கோயில் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடுகிறது. ராமர் கோயில் தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் மற்றும் புதிய அறங்காவலர்கள் நியமனம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறங்காவலர் தினேந்திர தாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ராமர் கோயில் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும், அனைத்து அறங்காவலர்களும் பங்கேற்பார்கள். ஏற்கனவே முடிக்கப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்தும், இரண்டு முதல் மூன்று புதிய அறங்காவலர்களை சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்படும்.

உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தொடர்வார்கள். உறுப்பினர்கள் எடுக்கும் கூட்டு முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அரசியல் பிரமுகர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள்.

எங்களைப் பொறுத்தவரை புதிய தலைமை செயல் அதிகாரி தேவையில்லை, ஏனெனில் அனைத்து பரிவர்த்தனைகளும் சீராக நடந்து வருகின்றன.

ராம் லல்லா மற்றும் அனைவரும் திருப்தியாக இருக்கும் வரை, எல்லாம் சரியாகவே இருக்கும். உறுப்பினர்கள் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வோம்.

என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b