மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 61 ஆக உயர்வு - பரிசீலிக்க மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி, 23 ஜூலை (ஹி.ச.) மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 61-ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நா
மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 61 ஆக உயர்வு - பரிசீலிக்க மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி, 23 ஜூலை (ஹி.ச.)

மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 61-ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை சீராக 60-ல் இருந்து 62 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் தங்களது உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, ஓய்வு வயது உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஒப்புக்கொள்ளும் மாநிலங்களில், நீதிபதிகள் 61 வயது வரை பணியில் தொடர அனுமதிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2026 முதல் இடைக்கால நடவடிக்கையாக அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இடைக்கால ஏற்பாடு, மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நாடு முழுவதும் 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டுமா என்ற அடிப்படை சட்டப் பிரச்சினை மீதான இறுதி தீர்ப்பை பாதிக்காது என்றும், மாநிலங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல், அந்த சட்டக் கேள்வியை உச்ச நீதிமன்றம் சுதந்திரமாகவே முடிவு செய்யும் என்றும் அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மாநிலங்களுக்கும், அந்த உயர் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓய்வு வயது உயர்வுக்கு ஒப்புக்கொள்ளும் மாநிலங்கள் விரிவான பதில் மனு தாக்கல் செய்யத் தேவையில்லை, ஒப்புதல் குறித்த சுருக்கமான அறிக்கை அளித்தால் போதும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதிலும் ஓய்வு பெறுகின்றனர்.

ஆனால் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 60 ஆகவே உள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு ஷெட்டி கமிஷன் பரிந்துரையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த முடியாது என்று கூறியிருந்தது. இருப்பினும் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் போன்ற சில மாநிலங்கள் தங்கள் மாநில நீதிபதிகளின் ஓய்வு வயதை 61 அல்லது 62 ஆக உயர்த்தி முடிவெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b