தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை பிஆர்எஸ் ஏன் கோரவில்லை?– முதல்வர் ரேவந்த் ரெட்டி கேள்வி
ஹைதராபாத் , 23 ஜூலை (ஹி.ச.) தன் மீது கூறப்படும் இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பதில் அளித்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் கூறுகையில
A


ஹைதராபாத் , 23 ஜூலை (ஹி.ச.)

தன் மீது கூறப்படும் இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பதில் அளித்துள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் கூறுகையில்,

என் மீது குற்றச்சாட்டு கூறுபவர்கள் அதற்கான ஆதாரங்களுடன் புகார் அளிக்க வேண்டும். புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் அது தவறான புகார் என தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தனது வாக்கை மாற்றுவதற்காக தேர்தல் விதிமுறைகளின்படி ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் ரேவந்த் ரெட்டி கூறினார்.

கடந்த காலத்தில் ஹைதராபாத் மாநகராட்சி எல்லைக்குள் ஆந்திராவை சேர்ந்தவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், இதற்கு எதிராக காங்கிரஸ் நீதிமன்றத்தை அணுகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தெலங்கானாவில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சீரமைப்பு என்ற பெயரில் தகுதியானவர்களின் வாக்குகள் நீக்கப்படாமல் இருக்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வாக்கு இல்லாமல் இருந்தால் மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் எவ்வாறு கிடைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, ஹைதராபாத் நகரில் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஹைட்ரா அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ரேவந்த் ரெட்டி பாராட்டினார்.

பல சட்டவிரோத சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காளேஸ்வரம் திட்ட கட்டுமானத்தில் தரநிலைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், அந்தத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார்.

இதன் காரணமாகவே முன்னாள் முதல்-மந்திரி கே. சந்திரசேகர் ராவ், முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவை சில காலம் அமைச்சரவையில் இருந்து விலக்கி வைத்ததாகவும் அவர் கூறினார்.

முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் இடைநிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகளால் 27 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் ரேவந்த் ரெட்டி வேதனை தெரிவித்தார்.

குளோபரீனா நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கெடிஆர் தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் மரணங்களுக்கு பொறுப்பேற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிஆர்எஸ் கட்சி ஏன் கோரவில்லை என்றும் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA