Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 23 ஜூலை (ஹி.ச.)
கோவை, சின்னியம்பாளையத்தில் இருந்து இருகூர் செல்லும் பாதையில் அமைந்து உள்ள பழைய இரும்பு குடோன் ஒன்றில், பூட்டிய கேட்டிற்கு அடியில் நைஸாக நுழைந்து சுமார் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகளைச் சாக்கு மூட்டையில் கட்டி அசாத்திய துணிச்சலுடன் திருடிச் சென்ற மர்ம நபரின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி, அப்பகுதி தொழில் அதிபர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் இருகூர் சாலையில் பழைய இரும்பு குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4.45 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவன், குடோன் கேட்டிற்கு அடியில் இருக்கும் சிறிய இடைவெளி வழியே நைஸாக உள்ளே நுழைந்து உள்ளான்.
உள்ளே இருந்த சுமார் ரூ.35,000 முதல் ரூ.45,000 மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் தேடிப் பிடித்துச் சாக்கு மூட்டையில் கட்டிய அந்த நபர், எந்த விதப் பயமுமின்றி மிகச் சாவகாசமாக கேட்டை திறந்து வெளியேறி, பைக்கில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் தப்பியோடி உள்ளான்.
பட்டப் பகலில் அரங்கேறிய இந்தத் துணிகரத் திருட்டு குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
புகாரின் பேரில், குடோனில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளை வைத்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த சி.சி.டி.வி வீடியோ, சின்னியம்பாளையம் சுற்றுவட்டாரக் தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / Durai.J