கனமழையால் நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்
ஜம்மு, 25 ஜூலை (ஹி.ச.) இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையான வானிலை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை 19-ஆம் தேதி முதல் பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு வழித்தடங்களிலும் யாத்திரையை ஜம்மு-காஷ்மீர் நிர்வ
Amarnath Yatra, suspended due to heavy rain, resumes.


ஜம்மு, 25 ஜூலை (ஹி.ச.)

இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையான வானிலை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை 19-ஆம் தேதி முதல் பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு வழித்தடங்களிலும் யாத்திரையை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது.

கனமழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 6 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை, இன்று மீண்டும் தொடங்கியது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே ஜம்முவில் உள்ள பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து புதிய பக்தர்கள் குழு காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கி புறப்பட்டது.

ஜம்மு அடிப்படை முகாமில் இருந்து இன்று அதிகாலையில் புறப்பட்ட பக்தர்கள் வாகன அணிவகுப்பு, உதம்பூர் வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கி வெற்றிகரமாக சென்றது.

தற்போது ஜம்முவில் இருந்து புறப்படும் பக்தர்கள் பால்டால் வழித்தடத்தில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மோசமான வானிலை காரணமாக பாதைகள் சேதமடைந்துள்ளதால் பஹல்காம் வழித்தடம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

ஆறு நாள் இடைநிறுத்தத்திற்கு பிறகு வானிலை மற்றும் தரை நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்ததை அடுத்து யாத்திரையை மீண்டும் தொடங்க நிர்வாகம் முடிவு செய்தது.

57 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது.

ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நடைபெறும். தெற்கு காஷ்மீரில் உள்ள புனித குகைக் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இதற்கிடையே, தொடர் கனமழை காரணமாக தோடா மாவட்டத்தில் தோடா-புல் தோடா சாலை மற்றும் புல் தோடா-காட் அரசு மருத்துவக் கல்லூரி சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன, மேலும் பல இணைப்புச் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b