Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 25 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் வயர்மேன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆத்தூர் அருகே மஞ்சினி மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த அய்யாசாமி மற்றும் வயர்மேனாக பணியாற்றி வந்த சந்திரன் ஆகியோர், தற்காலிக மின் இணைப்பு வழங்குவதற்காக பொதுமக்களிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணிப்பு மேற்கொண்டனர். லஞ்சத் தொகையை பெற்றுக் கொண்டிருந்தபோது இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மின்வாரிய நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கையாக உதவி பொறியாளர் அய்யாசாமி மற்றும் வயர்மேன் சந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சேலம் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குணவர்த்தினி பிறப்பித்துள்ளார்.
அரசு அலுவலர்கள் மீது லஞ்சப் புகார் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN