Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 25 ஜூலை (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமிகள் அறிக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக தவெக அரசைக் கண்டித்தும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பழனி ரவுண்டானா அருகே இன்று (ஜூலை 25) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில்
தூய ஆட்சி தருவோம். சுத்தமான ஆட்சியைத் தருவோம். எங்களுக்குப் பணம் தேவையில்லை. லஞ்சம் வாங்க மாட்டோம். லஞ்சம் வாங்குபவர்களை விடமாட்டேன் என்று சொல்லுகிற முதல்வர் விஜய், பழநியில் நடந்த பத்திரப்பதிவு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தில் தவெக அரசு மெத்தனமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்காது. எனவே, முதல் குற்றவாளி தவெக அரசு தான்.
இந்தப் புகார் எழுந்த பிறகு, உடனடியாக நாங்கள் ஹரிச்சந்திரன், புத்தர், இயேசுநாதர் வழிவந்த அரசு என்பதைப் போல, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
சிபிசிஐடி அமெரிக்காவில் இருந்தா வந்திருக்கிறது?. முதல்வர் என்ன உத்தரவிடுகிறாரோ அதைத்தான் சிபிசிஐடி சொல்வார்கள். அதற்கு தகுந்தாற்போல இப்போது விசாரணையும் போய்க் கொண்டிருக்கிறது.
இதுவரைக்கும் பத்திரப்பதிவு செய்த அதிகாரி, விற்றவர், வாங்கியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் விசாரணை வளையத்திற்குள் அவர்கள் வரவே இல்லை.
அவர்கள் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். துபாய், அமெரிக்கா, லண்டன் சென்று குற்றவாளிகளைக் கைது செய்யும் காவல்துறை, பழநியில் இருக்கிற அந்த 3 பேரை இன்னும் ஏப் கைது செய்யவில்லை.
தூய ஆட்சி நடத்துகின்றேன் என்று சொல்லும் முதல்வர் விஜய் சிபிசிஐடியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆவண எழுத்தர்கள் தான் பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு புரோக்கர்களாக இருக்கிறார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் இழுத்தடிப்பார்கள். லஞ்சம் கொடுத்தால் அன்றைக்கே வேலை முடிந்துவிடும். என்னிடம் இதற்கான ஆதாரம் இருக்கிறது.
மகளிருக்கு ரூ.2500 தருவதாக சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினுடைய தம்பியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். வெள்ளை அறிக்கை கொடுப்பதாகக் கூறி, திமுக ஆட்சியில் இருந்த நிதிநிலை அறிக்கையை தான் கொடுத்திருக்கிறார்.
எல்லாமே ஏமாற்று வேலை. இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாற்றுவார்கள் எனத் தெரியாது. தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று சொன்ன கர்நாடகா முதல்வர் சிவகுமாரை சந்தித்துப் பேசுவதை விட்டுவிட்டு, காவிரி பிரச்சினைக்கு நீதிமன்றத்துக்கு சென்று வெற்றி பெற வேண்டும்.
பழனியில் நடந்த முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், 234 தொகுதியிலும் ஆர்ப்பாட்டம் , போராட்டம் நடத்தி இது பொய் ஆட்சி, போலியான ஆட்சி, மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி என்பதை முகத்திரையைக் கிழித்துக் காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பழனி தொகுதி எம்எல்ஏ ரவி மனோகரன், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், முன்னாள் எம்பி குமாரசாமி உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b