Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 26 ஜூலை (ஹி.ச)
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரான திண்டிவனம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளருமான அர்ஜூனன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
அம்மா இருக்கும் போது வேட்பாளரின் பின்புலம், பொருளாதாரம் பின்புலம் பார்த்து உதவி செய்வார்கள். அது போல் எடப்பாடி பழனிச்சாமி செய்வார் என இலவு காத்த கிளி போல காத்திருந்தோம்.
ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அந்நேரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தான் எங்களுக்கு பணம் உதவி செய்தார்.
கட்சித் தலைமை பொருளாதார உதவி செய்திருந்தால் குறைந்தது 2 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருப்பேன். கட்சி தலைமை பொருளாதார உதவி செய்திருந்தால் திண்டிவனம், வானூர் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.
இந்த தோல்விக்கு காரணம் கட்சி தலைமை தான். மேலும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பாளராக நியமித்துள்ளவர்கள் தான் அதிமுகவை தோற்கடித்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ள பொறுப்பாளர்கள், சிவி.சண்முகம் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
எங்கள் தோல்விக்கு காரணம் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ள பொறுப்பாளர்கள் தான். சிவி.சண்முகம் தான் தோல்விக்கு காரணம் என தவறாக அவதூறு பரப்பி வருகிறார்கள். அப்படி அவதூறு பரப்பினால் எங்களாலும் இருபது மடங்கு பதிலடி தர முடியும்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எங்களை அமைதியாக இருக்கக் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மீது தவறாக பேசுவது, அவதூறு பரப்புவதை இன்றோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
திண்டிவனம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருந்தால் தமிழக அரசியலலே மாறியிருக்கும். இந்த தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமையும், எடப்பாடி பழனிச்சாமியால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களும் தான் காரணம். கட்சி பொறுப்புகள் வேண்டாம்,
தொடர்ந்து கட்சியில் பணியாற்றுவோம். வேறு கட்சிக்கு செல்லும் எண்ணமில்லை. கட்சிக்காக உழைத்தவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, தோல்விக்கு காரணமானவர்களுக்கெல்லாம் பதவி வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் முதல் கட்டமாக 1150 பேர் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர். அடுத்த கட்டமாக ஒன்றிய அணி செயலாளர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் அடுத்த கட்டமாக தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்யவுள்ளனர் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN