நிலத்தகராறில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முயற்சி - பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை
தருமபுரி, 26 ஜூலை (ஹி.ச.) தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சாவடி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (61). இவருக்கு கடத்தூர் பகுதியில் 3½ ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை கடந்த வாரம் விற்பனை செய்ததைத் தொடர்ந்து, நேற்று நிலத்தை அளவீடு செய்வதற்காக சென்றுள்ளார
Kadathur police station


தருமபுரி, 26 ஜூலை (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சாவடி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (61). இவருக்கு கடத்தூர் பகுதியில் 3½ ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை கடந்த வாரம் விற்பனை செய்ததைத் தொடர்ந்து, நேற்று நிலத்தை அளவீடு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது பக்கத்து நில உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் கணேசன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டதால், உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்திற்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, தன்னை தாக்கியவர்கள் குறித்து கணேசன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை அவசியம் என போலீசார் கருதிய நிலையில், உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடத்தூர் போலீசார் பாலக்கோட்டில் உள்ள வீட்டிற்கு விரைந்து சென்று, கணேசனின் உடலை அடக்கம் செய்வதற்கு முன் தடுத்து நிறுத்தி உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து

தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN