Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 26 ஜூலை (ஹி.ச.)
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 40 செண்ட் நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், முறையான நீதி கிடைக்க இவ்வழக்கை உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றக் கோரி இந்து முன்னணி சார்பில் பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நிலம் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, நிலத்தின் பத்திரத்தை ரத்து செய்துள்ளது. மேலும், இவ்வழக்கு தற்போது சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்ததாவது,
இந்த 100 கோடி ரூபாய் நில மோசடியில் ஆளுங்கட்சியினர் மற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநில அரசின் கீழ் செயல்படும் சிபிசிஐடி விசாரணை மூலம் முழு உண்மையும் வெளிவராது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
மேலும், 1888-ஆம் ஆண்டு எந்த நோக்கத்திற்காக அந்த இடம் வழங்கப்பட்டதோ, அதே நோக்கத்திற்கு மட்டுமே மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலம் குறித்து எனக்குத் தெரியாது என அமைச்சர் கூறுவது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. பத்திரப்பதிவுத் துறை ஐஜி (IG) நிலைக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. இதில் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடுவது அவர்களின் உரிமை, அதை இந்து முன்னணி வரவேற்கிறது.
ஆனால், இப்போராட்டத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தீய சக்திகள் உள்நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்கின்றன. மாணவர்களுக்குப் பாதிப்பு வராத வகையில் உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சருக்குப் பாராட்டுகள். கல்வி அமைச்சரின் ராஜினாமாவையும் இந்து முன்னணி வரவேற்கிறது.
இந்து சமய அறநிலையத்
துறையில் பக்தியற்ற மற்றும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக (EO) இருப்பதால், கோவில் பராமரிப்பு மற்றும் திருட்டுகள் குறித்து அக்கறையின்றி செயல்படுகின்றனர்.
கரூரில் உள்ள 3,000 ஏக்கர் கோவில் நிலப் பிரச்சினையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். கோவில் நிலங்கள் ஏழை விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN