Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூலை (ஹி.ச.)
உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50க்கும் அதிகமான மலைக் கிராமங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைக் கண்டித்து கடமலை – மயிலை ஒன்றியம் முழுவதும் முழு கடையடைப்பும், கடமலையில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றிருக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதை அடிப்படையாக வைத்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டியும் , மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை உடனடியாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியும், எந்தவித நடவடிக்கை எடுக்காததன் விளைவே தற்போது வேறுவழியின்றி கவன ஈர்ப்பு முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியிருப்பதாக அக்கிராமங்களைச் சார்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, மேகமலை மலைக்கிராமங்களில் தலைமுறை, தலைமுறையாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b