ஆந்திராவில் ஆகஸ்ட் 1 முதல் குறைந்த விலையில் தரமான அரிசி விற்பனை - பவன் கல்யாண் வரவேற்பு
அமராவதி , 27 ஜூலை (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் குறைந்த விலையில் தரமான அரிசி விற்பனை செய்யப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஆந்திர துணை முதல்வர் பவன்
A


அமராவதி , 27 ஜூலை (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் குறைந்த விலையில் தரமான அரிசி விற்பனை செய்யப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வரவேற்று, இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் முக்கியமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெளிச்சந்தையில் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவர்களுக்கு தரமான அரிசியை மலிவு விலையில் வழங்கவும் கூட்டணி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த பொதுவிநியோகத் துறை அமைச்சர் நாடெண்ட்லா மனோகர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள 130 உழவர் சந்தைகள் மற்றும் 500 அரிசி ஆலைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மையங்கள் மூலம் அரிசி விற்பனை செய்யப்படும். பிபிடி (BPT) சூப்பர் ஃபைன் அரிசி ஒரு கிலோ ரூ.52-க்கும், தரம்-1 பச்சரிசி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படும்.

அரிசி விலை உயர்வு குறித்து அவசர ஆய்வு நடத்தி, அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் மூலம் பொதுமக்களின் பொருளாதாரச் சுமை கணிசமாகக் குறையும் என்ற நம்பிக்கையையும் அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA