கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு பணி வழங்கிய முடிவு கொள்கை ரீதியானது – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வாதம்
மதுரை, 27 ஜூலை (ஹி.ச.) கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிய தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது
உயர்நீதிமன்றம்


மதுரை, 27 ஜூலை (ஹி.ச.)

கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிய தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு சிறிது நேரத்தில் வழங்கப்பட உள்ளது.

வழக்கில், தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசுச் செயலாளர் கே.எஸ். பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், 2018-ஆம் ஆண்டு அரசாணையின்படி கருணை அடிப்படையில் நியமிக்கப்படும் நபர்களின் பணியை நிரந்தரப்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஒப்புதல் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கியது அரசின் திட்டமிட்ட கொள்கை முடிவு என்றும், அது அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அரசு தரப்பு விளக்கம் அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் மதுரை லீலாவதி கொலை வழக்கில் அரசு வேலை வழங்கப்பட்டதை மேற்கோள் காட்டி, அவற்றை இந்த வழக்குடன் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல என்று வாதிட்டது.

மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காவல்துறை கூட்டத்தை முறையாக கையாளாததன் விளைவாக ஏற்பட்டதாகவும், உயிரிழந்த 41 பேருக்கும் எந்தத் தவறும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

விசாரணையின் போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் சுமார் 39 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

ஒவ்வொரு அரசு வேலைத் தேர்வுக்கும் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர்,

மனுதாரர் தன்னை அரசு வேலைத் தேர்வுக்குத் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இது உண்மையில் பொதுநல வழக்கா அல்லது அவருக்கே அரசு வேலை வழங்கக் கோரும் வழக்கா என்பது தெளிவாக இல்லை என்று வாதிட்டார்.

மேலும், இந்த வழக்கில் மட்டும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதை எதிர்க்கப்படுகிறது.

காவல்துறையின் செயல்பாடு தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும் அரசு தரப்பு வலியுறுத்தியது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சிறிது நேரத்தில் வழங்க உள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P