Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 29 ஜூலை (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மியாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து, திறந்திருந்த பாதாள சாக்கடைக் குழியில் தவறி விழுந்த 70 வயது முதியவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக இன்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் ஹபீஸ்பேட்டை பிரேம் நகரைச் சேர்ந்த பாலையா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து மியாபூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று இரவு எங்களுக்கு தகவல் கிடைத்தது. பிரேம் நகரைச் சேர்ந்த பாலையா என்ற 70 வயது முதியவர் திறந்திருந்த பாதாள சாக்கடையில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், காணாமல் போன முதியவரை கழிவுநீர் கால்வாய் வழியாக தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
அவர் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினரிடம் விவரங்களைக் கேட்டறிந்ததுடன், காணாமல் போன நபரைக் கண்டறிவதற்கான தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / vidya.b