Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 29 ஜூலை (ஹி.ச.)
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்படும் ஸ்ரீவாரி சேவையில் ஈடுபடும் சேவகர்களின் பணித்திறனை அடிப்படையாக கொண்டு, அவர்களுக்கு ‘சிபில் ஸ்கோர்’ போன்ற தர மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த டி.டி.டி. திட்டமிட்டுள்ளது.
திருப்பதியில் நடைபெற்ற குழு மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற டி.டி.டி. செயல் அலுவலர் எம். ரவிச்சந்திரா இதுகுறித்து கூறியதாவது:-
ஸ்ரீவாரி சேவையை கிராம அளவிற்கு விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேவகர்களின் பணித்திறன், பக்தர்களுக்கு வழங்கும் சேவை, ஒழுக்கம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு மதிப்பீடு வழங்கப்படும்.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் சேவகர்களுக்கு எதிர்காலத்தில் பணிகள் ஒதுக்கப்படும். இரண்டு தெலுங்கு மாநிலங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் கோவில்கள் மூலம் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவையை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த குழு மேற்பார்வையாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தம்
இதற்கிடையே, திருப்பதியில் புதன்கிழமை ஸ்ரீவாரி சர்வ தரிசனத்துக்கான (SSD) டோக்கன் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணுநிவாசம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மையங்களில் புதன்கிழமை டோக்கன்கள் வழங்கப்படாது என டி.டி.டி. அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம், வியாழக்கிழமை மதியம் முதல் வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA