Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)
கோவையைச் சேர்ந்த பிரபல மருத்துவ தம்பதியினர் மீது கந்துவட்டி குற்றச்சாட்டு தொடர்பாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் முறையாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமலேயே அந்த தம்பதியினரின் வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கியதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து அந்த மருத்துவ தம்பதியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி இளந்திரையன், முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். அதில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கை முடக்க வேண்டுமென்றால் அதற்கு முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், வெறும் புகாரின் அடிப்படையில் அல்லது முன் விசாரணை என்ற பெயரில் வங்கிக் கணக்கை முடக்குவது தனிநபரின் வாழ்வாதார உரிமையை பறிப்பதற்கு சமம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்குவது சட்டவிரோதமானது என்றும், இது போன்ற நடவடிக்கைகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவ தம்பதியினரின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் பண பரிவர்த்தனைக்கு எந்த தடையும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கந்துவட்டி குற்றச்சாட்டு போன்ற வழக்குகளில் போலீசார் அத்துமீறி செயல்படுவதற்கு இந்த தீர்ப்பு ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக அமையும் என்று சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b