Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 29 ஜூலை (ஹி.ச.)
காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக தமிழகம்-கர்நாடகம் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு, இரு மாநிலங்களுக்கும் இடையேயான நீர் பங்கீட்டை கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வருகிற 29-ந்தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவில்லை. மேலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவு, கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA