கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எதிர்ப்பு இல்லை - வானதி சீனிவாசன்
கோவை, 29 ஜூலை (ஹி.ச.) கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு எதிராக இல்லை என்றும், திட்ட அறிக்கைகளில் (DPR) உள்ள தொழில்நுட்ப மற்றும் கொள்கை குறைபாடுகளே அனுமதி தாமதத்திற்கு காரணம் என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி
வானதி சீனிவாசன்


கோவை, 29 ஜூலை (ஹி.ச.)

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு எதிராக இல்லை என்றும், திட்ட அறிக்கைகளில் (DPR) உள்ள தொழில்நுட்ப மற்றும் கொள்கை குறைபாடுகளே அனுமதி தாமதத்திற்கு காரணம் என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) கடந்த ஜூலை 22-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான திருத்தப்பட்ட DPR-களும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2025 நவம்பரில் அனுப்பப்பட்ட முதல் DPR-களில் மக்கள் தொகை, தினசரி பயணிகள் பயன்பாடு, உயர்மட்ட நிலையங்கள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், பின்னர் மாநில அரசு திருத்தி சமர்ப்பித்த அறிக்கைகளிலும் அந்த குறைபாடுகள் சரிசெய்யப்படவில்லை என்று MoHUA தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சராசரி பயண தூரம் 15 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேல் உள்ள நகரங்களில்தான் பெரிய அளவிலான மெட்ரோ முதலீடுகள் நியாயப்படுத்தப்பட முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், தற்போதைய சூழலில் கோவை மற்றும் மதுரைக்கு Bus Rapid Transit System (BRTS) உள்ளிட்ட பேருந்து மையப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து அமைப்புகளை வலுப்படுத்த பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போபால், இந்தூர், பாட்னா, கொச்சி மற்றும் ஆக்ரா போன்ற நகரங்கள் முறையான Comprehensive Mobility Plan (CMP), மக்கள் தொகைத் தரவுகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வலுவான DPR-களை சமர்ப்பித்து மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றதாகவும், அதேபோன்று கோவை மற்றும் மதுரைக்கான DPR-களும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Metro Rail Policy-யில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள்தொகை, பயணிகள் பயன்பாடு, பொறியியல் மற்றும் பொருளாதார சாத்தியக்கூறு உள்ளிட்ட அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய DPR தயாரித்து அனுப்பி, கோவை மற்றும் மதுரை மக்களின் மெட்ரோ கனவை நனவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam